வாக்குச்சாவடி மையத்தில் புகுந்த புகை மூட்டத்தில் அலுவலர்கள் சிக்கிக் கொண்டதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய இருக்கின்ற அலுவலர்கள் மையத்தில் தங்கி இருந்த நிலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ததால் அருகாமையில் இருந்த மின்மாற்றி மீது மின்னல் தாக்கியதில் அவை வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணத்தினால் மின்சார வயர்கள் அனைத்தும் எரிந்து புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்குசாவடி மையத்திற்குள் புகை புகுந்தால் அலுவலர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரான துரைசாமி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அலுவலர்களை கல்வி அலுவலர் விஜயலட்சுமி நேரில் சென்று விவரங்களை கேட்டு அறிந்து ஆறுதல் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமுதாய நலக் கூடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைத்து மாற்று அலுவலர்களை வரவழைத்து தேர்தல் நடைபெற்றுள்ளது.