ஏரிக்கரை அருகாமையில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கிராமத்தில் ஏரியின் அருகாமையில் இரண்டு நபர்கள் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கொண்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று பறவைகள் விற்பனை செய்யப்படுகின்றதா என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு உடும்புகள் மற்றும் கொக்குகளுடன் வந்த இரண்டு நபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் பாபு மற்றும் சந்திரன் என்பதும், ஏரிக்கரை அருகாமையில் உடும்புகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்ததும் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்த குற்றத்திற்காக பாபு மற்றும் சந்திரனை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனதுறையினர் அவர்களிடம் இருந்த மூன்று உடும்புகள் மற்றும் 11 வெள்ளைநிற கொக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.