ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு என்னதான் அதிமுக இரும்புக்கோட்டை என்று மூத்த தலைவர்கள் கூறினாலும் கட்சி முன்பு போல இல்லை என்று அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் அதிமுக வலுவிழந்து இருப்பதை ஒரு போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சசிகலா தினம் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். மேலும் தான் மீண்டும் கட்சியை சரி செய்வேன் என்றும், எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி எப்படி இருந்ததோ அதேபோல தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி இருக்கிறது என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் அண்ணா படம் தற்போது இருக்கிறதா? மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன. அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும் கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவியை புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும். தலைமையை நம்பி அதிமுக இல்லை. தொண்டனையே நம்பி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.