மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரேவின் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவர்கள் 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா அளித்த வாக்குறுதிப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து சிவசேனா எம்.பி.யும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத், சிவசேனாவின் சின்னமான புலி தேசியவாத காங்கிரஸ் சின்னமான கடிகாரத்தை கழுத்தில் அணிந்துகொண்டு தாமரையை (பாஜக சின்னம்) பறிப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து மகாராஷ்டிராவில் கூட்டணி கணக்கு மாறியது. பாஜக தங்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி இரண்டரை ஆண்டுகள் பாஜகவும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாகவுள்ளார்.
இதற்கு பாரதிய ஜனதாவிடம் இருந்து இதுவரை ஆதரவான சமிக்ஞை வரவில்லை. ஆகவே பாரதிய ஜனதாவுக்கு உறுதியான பதிலடி கொடுக்க சிவசேனா தயாராகி வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆட்சிக்கு மறைமுகமாக உதவவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர்கள், சிவசேனாவை நம்ப வைத்து பாரதிய ஜனதா ஏமாற்றி விட்டது என குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து இதுதொடர்பாகப் பேசவுள்ளனர்.
இதற்கான நிகழ்வை தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் முன்னெடுக்கவுள்ளார். சோனியா காந்தியுடனான சந்திப்பின்போது அவரும் உடனிருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. சிவசேனா கட்சியை பாரதிய ஜனதா ஏமாற்றுவது இது முதல்முறையல்ல. கடந்த முறையும் இவ்வாறு வாக்குறுதி அளித்து, கடைசியில் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.பாரதிய ஜனதாவின் செய்கையால் காயமுற்ற புலியாக உறுமும் சிவசேனா, இம்முறை பதிலடி கொடுக்க தயாராகி விட்டதாகவே அரசியல் கட்சி வட்டார தகவல்களும் தெரிவிக்கின்றன.