தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் முக. ஸ்டாலினுடைய நடவடிக்கையால் பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருவதோடு பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களை வரவேற்று சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 50 பதிவாளர் அலுவலகம், 9 துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களில், பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் என்று சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்கவிருக்கிறது. அதில் பொதுமக்கள் பத்திர ஆவணங்கள் பெறுவதில் உள்ள சிக்கல், வில்லங்கச் சான்றிதழ் திருத்தம், முறைகேடு பதிவுகள், திருமணப் பதிவுகள், சேவை குறைபாடுகள், போன்ற புகார்கள் பற்றி மனு அளிக்கலாம். இவற்றில் விசாரணை இல்லாத புகார்கள் 2 நாட்களில் சரி செய்யப்படும். மேலும் விசாரணை மீதான புகார்களின் மீது விசாரணை நடத்தி உடனடியாக புகார்கள் தீர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.