ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதியில் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி கல்ராமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளதால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சித்தன்குட்டையிலிருந்து கல்ராமொக்கை செல்லும் சாலையில் ஓரிடத்தில் உள்ள தாழ்வான பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் சாலையில் தேங்கியுள்ளது.
இதனால் கல்ராமொக்கை கிராமத்திலிருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்து கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணிரீல் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சித்தன்குட்டை சென்று அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.இந்த பகுதியில் விரைந்து பாலம் அமைத்து, பேருந்து செல்லும்படி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.