கெங்கபுரத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் அங்கு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெங்கபுரம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரகுமார் என்பவரும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் தேர்தல் முடிவடைந்ததும் கெங்கபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர் வேட்பாளர் ராஜாவிடம் சென்று அவரது வீட்டில் பிரச்சனை நடப்பதாகவும் அதனை தாங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து ராஜா, சேட்டு வீட்டிற்கு தனது ஆதரவாளர்களான நடராஜன், அன்பரசு மற்றும் ஜானகிராமன் ஆகியோருடன் இரண்டு கார்களில் சென்றுள்ளார். ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அந்தக் காரை தேரடியில் விட்டுவிட்டு செல்லும்போது ஹரிஹரகுமாரின் ஆதரவாளரான பாலகுரு என்பவர் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் ஹரிஹரகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களான பெருமாள், சண்முகம், சிலம்பரசன், முருகேசன், ரமேஷ், ராஜேந்திரன், அஜித்குமார், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து ராஜாவையும் அவரது ஆதரவாளர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜாவின் கார் மற்றும் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜா, வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஹரிஹரகுமார், சண்முகம், பெருமாள், சிலம்பரசன், விக்னேஷ், பாலகுரு, ராஜேந்திரன், ரமேஷ், முருகேசன், அஜித் குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.