நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க அனுமதித்தால் 10 லட்சம் தருவதாக கூறி ஒப்பந்ததாரர் ஒருவர் ஏமாற்றியதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்காக ஒப்பந்ததாரர் ஒருவர் ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதன்பின் முன்பணமாக ரூபாய் 1 லட்சத்தை மணியிடம் வழங்கி அவரது நிலத்தில் மின்கோபுரம் அமைக்க அனுமதிக்குமாறு ஒப்பந்ததாரர் கேட்டதும் அவர் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணியின் நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதால் தனது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல், அவர் கட்டிட வேலைக்காக சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து மணி தனது ஊருக்கு வந்து நிலத்தை பார்த்துள்ளார். அங்கு உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அதன்பின் வேலையை கண்காணித்துக் கொண்டிருந்த ஒப்பந்ததாரரிடம் சென்று தனக்கு தரவேண்டிய இழப்பீடு தொகையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த ஒப்பந்ததாரர் மறுப்பு தெரிவித்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதனால் மனம் உடைந்த மணி அங்கிருந்த 200 அடி உயர் மின்கோபுரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட ஒப்பந்ததாரர் மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து அவ்வழியே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 பேர் உயர் மின்கோபுரத்தில் ஏறி மணியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மணி இறந்து விட்டது தெரியவந்தது. அதன்பின் மணியின் சடலத்தை தூக்கில் இருந்து இறக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணியின் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உரிய இழப்பீடு வழங்கினால் தான் அவரது உடலை எடுக்க அனுமதிப்போம் என்று கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சப் கலெக்டர், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று உயர் மின்கோபுரத்திலிருந்த மணியின் சடலத்தை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் மணியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.