தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்கள் இடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனை மதிக்காமல் 75% வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கள் ஏற்படும்போது வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.