‘அரண்மனை-3’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மறைந்த நடிகர் விவேக் குறித்து சுந்தர்.சி பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அரண்மனை-3 படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய சுந்தர்.சி, ‘ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது மிகவும் கடினம். புதிதாக ஒரு படம் எடுக்கும்போது, ரசிகர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் 2-ஆம் பாகம், 3-ஆம் பாகம் எடுக்கும்போது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இருக்க வேண்டும். ஆனால் அது வேற மாறி இருக்க வேண்டும். அதான் எங்களுடைய சவால். முதலில் நான் ஆர்யாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது வரை படத்தின் வியாபாரம் உள்ளிட்டவற்றிலும் அவர் பக்கபலமாக இருக்கிறார்.
அரண்மனை-3 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் 15 நாட்கள் படமாக்கினோம். அதில் ஆர்யாவும், ராசிகண்ணாவும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார்கள். விவேக் சார், யோகி பாபு காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் சாருக்கு இதுதான் கடைசி படமாக இருக்கும் என நினைக்கவில்லை. எங்களுக்கு உடல்நிலை குறித்து அவர் நிறைய அட்வைஸ் செய்வார். விவேக் சாருடன் நிறைய படங்களில் பயணித்துள்ளேன். அவருடைய இழப்பு மிகவும் பெரியது. அரண்மனை படத்தை உதயநிதி சார் தான் வெளியிட்டார். முதல்நாளில் பூங்கொத்து கொடுத்து படம் சூப்பர் ஹிட்டாகும் என சொன்னார். தற்போது அரண்மனை-3 படத்தையும் உதயநிதி சார் தான் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு ரொம்ப நன்றாக இருக்கிறது என கூறினார். மகிழ்ச்சி அடைந்தேன்’ என தெரிவித்துள்ளார்.