சுற்றுலா வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது சுற்றுலாத் துறையாகும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் அதனை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் சுற்றுலா கட்டணம் என்ற புதிய திட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலாவில் கவனம் செலுத்தும் வகையில் தாய்லாந்தில் சுற்றிபார்க்க வருவோரிடம் 500 baht கட்டணத்தை வசூலிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்று வெகுவாக பரவி வருவதால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த திட்டமானது பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறையில் இன்னலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சுற்றுலா ஆணையத்தின் ஆளுநர் யுதாசக் சுபசோர்ன் கூறியதில் “தரமான சந்தையை உருவாக்குவதற்காகவே சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதனால் பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் தாய்லாந்தில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் பாங்காக், சியாங் மாய், ரனோங் மற்றும் சோன் புரி போன்ற இடங்களுக்கு உலகநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக இந்த கட்டணம் வசூலிக்கும் திட்டமானது எந்த அளவிற்கு செயல்படும் என்று தெரியவில்லை.