பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் சிறுவனுடன் வந்துள்ளார். அந்த 2 பேரும் தலா ஒரு பை வைத்திருந்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் காவல்துறையினரிடம் விரக்தியில் கண்ணீர் மல்க பேசத் தொடங்கினார். இதனை சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் 2 பேரும் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
அதன் பின் 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ஜார்ஜ்பெர்னாண்டஸ் என்பவரின் மனைவியான சத்திய வனிதா என்பதும் அவருடைய 12 வயது மகன் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சத்திய வனிதாவின் நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும் அந்த பெண் தெரிவித்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடமும் முறையாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததாக காவல்துறையினரிடம் அந்த பெண் கூறினார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றுள்ளனர்.