திருட வந்த வீட்டில் எந்த பொருளும் இல்லாத விரக்தியில் திருடன் ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்று விட்டு கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அதில் பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருடச் சென்ற வீட்டில் எந்த பொருளும் இல்லாத விரக்தியில் திருடன் இவ்வாறு கடிதம் எழுதி வைத்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.