எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சியில் ஏழு நாட்டு தூதர்கள் துணை அதிபர் முன்பாக பதவியேற்றுக் கொண்டனர்.
பொதுவாக தூதர்கள் பதவியேற்கும் பொழுது தங்கள் நாட்டிலிருந்து வழங்கப்பட்ட பதவி நியமனத்திற்கான ஆவணத்தை அதிபர் அல்லது அதற்கு இணையான பதவியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்து பணியாற்ற வேண்டும் என்ற மரபு அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அமீரகத்துக்கான ஜோர்டான், ஸ்பெயின், டிஜிபவுட்டி, ஜிம்பாவே, கம்போடியா, ஹாண்டுராஸ், பூட்டான் போன்ற ஏழு நாடுகளுக்கான தூதர்கள் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து பதவியேற்றுள்ளனர்.
அதிலும் ஜோர்டான் நாட்டு தூதர் நாசர் ஹபஸ்னா, ஸ்பெயின் நாட்டு தூதர் இனிகோ டி பலசியோ, டிஜிபவுட்டி நாட்டிற்கான தூதர் மவுசா முகம்மது அகமது, ஜிம்பாவே தூதர் லவ்மோர் மசேமோ ஆகியோர் பணிநியமன ஆவணத்தை துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் அளித்து வாழ்த்து பெற்று உறுதி மொழியும் எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்காத வெளிநாட்டு தூதர்களான கம்போடியாவுக்கான தூதர் ஹுன் ஹான், ஹண்டுராஸ் நாட்டு தூதர் லுயிஸ் அலோன்சோ வெலஸ்குவிஸ், பூட்டான் நாட்டு தூதர் சித்தன் டென்ஜின் போன்றோர் காணொளி வாயிலாக தங்களது பணிநியமன ஆவணங்களை சமர்ப்பித்து உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
இதனை பெற்றுக் கொண்டு துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியதில் “நான் எனது நட்பு நாடுகளின் தூதர்களை அன்புடன் வரவேற்கிறேன். அவர்களின் பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அமீரகம் வழங்கும். கொரோனா காலத்திற்குப் பின்பு இருதரப்பு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புதிய வாய்ப்புகளை உருவாக்கி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் துபாய் பட்டத்து இளவரசரான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் துணை ஆட்சியாளரான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கலந்துகொண்டனர். மேலும் அமீரக உள்துறை அமைச்சரான ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சரான ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் போன்றோரும் பங்கு கொண்டனர்.