லாரி டிரைவர் தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக வந்துள்ளனர். இங்கு லாரி ஓட்டுநரான பெரியசாமி என்பவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பெரியசாமி மண்ணெண்ணையை தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெரியசாமியின் குடும்பத்தினரை காப்பாற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அதாவது பெரியசாமியின் மனைவியான சுதா என்ற பெண்ணை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது குடும்பத்தினருடன் பெரியசாமி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.