மது அருந்தக்கூடாது என தந்தை கண்டித்தததல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள அவினாசிபட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் எலச்சிபாளையம் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தினமும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமி மகனை கண்டித்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் சதீஸ்குமார் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது ரங்கசாமி இனிமேல் மது குடிக்க கூடாது என அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக சதீஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சதீஷ்குமாரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.