மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரும்படி முதியவர் ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியில் சண்முகம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று ஆம்புலன்சில் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் நான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து கே.கே நகரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளேன். இதனையடுத்து எனது மகள் மற்றும் மகனுக்கு திருமணம் முடிந்த நிலையில் நானும் என் மனைவியும் மகனுடன் வசித்து வந்துள்ளோம்.
அப்போது எங்களை கவனித்து கொள்வதாகக்கூறி கடந்த 2016ஆம் ஆண்டு எங்களது சொத்துகளை எல்லாம் பேரன் பேருக்கு உயில் எழுதிவைக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சண்முகம் மகன் சொன்ன பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளார். இதற்குப்பின்னர் அந்த பத்திரத்தை பார்த்தபோது அது இனாம் செட்டில்மென்ட் பத்திரம் என்றும், கையெழுத்து வாங்கிகொண்டு சொத்துக்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்த நிலையில் எங்களை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
தற்போது அவர்கள் உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சண்முகத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சிகிச்சைக்கு கூட மகன் பணம் கொடுப்பதில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக அந்த மனுவில் இருந்துள்ளது. எனவே எங்களது சொத்துக்களை திருப்பி வாங்கி தரும்படி முதியவர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.