சிங்கப்பூர் மருத்துவ குழு ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பெண்ணின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் கணவர் ராஜகோபாலனுடன் வசித்து வந்த தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புற்றுநோய் முற்றியதால் அவரது உறவினர்கள் வீட்டில் வளர்ந்து வரும் 12 மற்றும் 9 வயது மகன்களை இறுதியாக பார்க்க வேண்டும் என்று ராஜேஸ்வரி ஆசைப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு விமானங்கள் சில மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.
எனவே ராஜேஸ்வரியை தமிழகத்திற்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் டன் டாக் செங் மருத்துவமனை தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரை இந்தியாவிற்கு அனுப்ப வெளியுறவுத்துறை அமைச்சகங்களிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரிக்கு விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் அனுமதி கிடைத்துள்ளது.
அதன் பிறகு விமானத்தில் இடம் கிடைக்காமல் போகவே சக பயணியர் மனது வைத்ததால் விமானத்தில் நல்ல முறையில் பயணிக்க முடிந்தது என்று ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். பின்னர் திருச்சிக்கு வந்த ராஜேஸ்வரி தனது இரண்டு மகன்களையும் நேரில் பார்த்த மன நிறைவில் இரண்டு வாரங்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் கணவர் ராஜகோபாலன் டன் டாக் செங் மருத்துவமனை தனது மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றியதற்காக தாங்கள் என்றும் நன்றி கடன் பட்டுள்ளதாக உருக்கத்துடன் பேசியுள்ளார். மேலும் மருத்துவ குழுவின் இந்த தன்னிகரற்ற செயலுக்காக பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.