கூலி தொழிலாளியை சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்பனூர் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவியின் மகனான மாரியப்பன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சுப்பையாவின் 2-வது மனைவியின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு மாரியப்பன் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது கோபமடைந்த இசக்கிமுத்து கட்டையால் மாரியப்பனை சரமாரியாக அடித்து உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இசக்கி முத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.