நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது தினசரி பாதிப்பு 17 மாதங்களுக்குப் பிறகு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 22ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் ஆடிட்டோரியம் உள்ளிட்டவை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள், ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும். கொரோனா தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம்.
திரையரங்குகளில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக டிக்கெட் மற்றும் உணவுப் பொருட்கள் என அனைத்திற்கும் பணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தும் இடங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கொரோனா அறிகுறி இல்லாத நபர்களுக்கு மட்டுமே திரையரங்கிற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.