திருச்சியில் குடும்ப வறுமையின் காரணமாக 38 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் இப்போது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்து வருகின்றார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சிறுவயதிலேயே 1980ஆம் ஆண்டு திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 2 வருடங்களிலேயே இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்துள்ளார். அதனால் தன்னுடைய 2 குழந்தைகளையும் வைத்து 1982 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
அப்போது ஒரு மருத்துவரின் உதவியுடன் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு 1982 ஆம் ஆண்டு தன்னுடைய 2 குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அவர்களை குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துள்ளனர். அப்போது முதல் குழந்தைக்கு இரண்டரை வயதும் 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகியிருந்தது. குழந்தைகளை விட்டுப் பிரியும் போது காளியம்மாளுக்கு 19 வயது தான் ஆகியிருந்தது. குழந்தையை ஒப்படைக்கும் போது அந்த மருத்துவர் குழந்தைகளை அடிக்கடி பார்ப்பதாக வந்து தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தைகளை பார்க்க வேண்டுமென்று காளியம்மாள் அங்கு சென்றபோது அவரின் முகவரியை மட்டும் பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்தும் பிள்ளைகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்று காளியம்மாள் கூறியுள்ளார். இதனையடுத்து காளியம்மாளுக்கு உதவி செய்த மருத்துவரும் இறந்துவிட்டார். அதன் பின்னர் தனக்கு உதவி செய்த மற்றொருவரான நீலாவதி என்பவரை தேடி கண்டறிந்துள்ளார் காளியம்மாள். மதுரையில் பறவை இல்லம் என்ற பெயரில் குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருகிறார் நீலாவதி.
அவரை நேரில் சந்தித்த போது அவர் எனக்கு காளியம்மாள் என்று ஒருவரை தெரியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மருத்துவமனையில் ஏதோ மர்மம் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் வரை தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.
தற்போது திருச்சி புங்கனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்ற நிலையில் தன்னுடைய பாணியில் கிடைக்கும் வருமானத்தை என் வீட்டு வேலை செய்து கிடைக்கும் பணத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார். தனது பிள்ளைகளுக்கு தற்போது முப்பத்தி எட்டு வயதுக்கு மேல் இருக்கும் காளியம்மாள் தனியாக இருப்பதாகவும், தன்னுடைய உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கூறியுள்ளார். அதனால் தன்னுடைய பிள்ளைகளை ஒருமுறையாவது பார்க்க வேண்டுமென்றும், அதற்கு அரசு உதவிட வேண்டும் என்றும், பிள்ளைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூறியுள்ளார்.