காஞ்சிபுரம் அருகே செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் பகுதியை சேர்ந்த இந்திரா என்ற பெண் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் இந்திராவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்றனர். இதையடுத்து இந்திரா அலறி சத்தம் போடவே அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்ட ஆரம்பித்தார். இதனால் பொதுமக்கள் சற்று பின்வாங்க கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திரா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 10 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க ஆணையிட்டனர். மேலும் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட பகுதி என்பதால் தனிப்படை போலீசார் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர். தற்போது துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த நபர்களில் ஒருவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். மற்றொருவரை உயிருடன் பிடித்துள்ளனர். அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.