கேரள அரசின் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், கிராமங்கள் தோறும் அரசே இலவசமாக முகாம்கள் அமைத்து கோவிசில்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வந்தது.
இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவிகித தடுப்பூசிகள் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜோசப் பெனிவால் கூறியதாவது, அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கீழ் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது அரசே இலவச தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அதிக அளவில் தடுப்பூசிகள் வீணாகி வருகின்றன. இதில் கேரளா அரசு தலையிட்டு தனியார் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசிகளை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு பயன்படுத்தாமல் இருக்கும் தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகங்களுக்கு நஷ்டம் ஏற்படும். மேலும் மக்களுக்கு பயன்பட வேண்டிய தடுப்பூசிகள் வீணாகும் நிலையும் உருவாகும் என்று அவர் கூறினார்.