இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஐபிஎல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். காரணம் பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் இந்த ஐபிஎல் போட்டி வருடந்தோறும் ஒரு திருவிழாவைப் போன்றே கொண்டாடப்படுகிறது.
இதனிடையே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஐபிஎல் போட்டிகளில் ‘பவர் பிளேயர்’ என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம் ஐபிஎல் அணிகள் தங்களது ஆடும் லெவனில் உள்ள வீரர்களின் பெயரை முன்கூட்டியே அறிவிக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக அணிகள் 15 வீரர்களின் பெயரை அறிவிக்கலாம்.
இதில் போட்டியின் நிலைமைக்கு ஏற்றவாறு விக்கெட் விழும் சமயத்தில் தேவையான பேட்ஸ்மேனை மாற்று வீரராக களமிறங்கச் செய்யலாம். அதே போன்று பவுலிங்கிலும் மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார். இந்த புதிய விதிமுறை குறித்து இன்று நடைபெறும் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ‘பவர் பிளேயர்’ விதிமுறை ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டால் போட்டியின் முடிவு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில், சில சமயங்களில் சில அதிரடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
அதுபோன்ற தருணங்களில் விருப்பமான அந்த வீரரை தேர்வு செய்து பேட்டிங் அல்லது பவுலிங்கில் பயன்படுத்தினால் போட்டியின் முடிவு நிச்சயம் யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இது விளையாட்டின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என கிரிக்கெட் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.