வெள்ளம், தீ விபத்து போன்ற காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மேலாண்மைதுறையினர் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கேஸ் சிலிண்டர் வெடித்தல் அந்த தீ விபத்தை ஈரத்துணி மற்றும் மண் போன்றவை வைத்து விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மேலும் எண்ணை போன்ற பொருட்களினால் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க கூடாது எனவும், நுரையை பாய்ச்சி காற்றை வெளியேற்றி தீயை அணைக்க வேண்டும் எனவும் செய்து காண்பித்துள்ளனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ராஜு, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமால், அரசு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.