தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது. அதிலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நடக்கக்கூடியவை சுவாரசியமானவை.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் மொத்தம் ஐந்து சின்னங்களில் நான்கு சின்னங்களில் யாரோ ஒருவர் வாக்களித்தது கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு சீட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து, பாரபட்சம் பார்க்காமல், கள்ளக்கபடம் இல்லாமல் அனைவருக்கும் வாக்களித்த அந்த மனசுதான் சார் கடவுள் என்று பதிவிட்டு வருகின்றனர். இது நகைச்சுவையாக இருந்தாலும் இன்னும் பலருக்கு வாக்களிக்க தெரியாத அளவிற்கு விழிப்புணர்வு இல்லை என்ற அவலத்தினை சுட்டிக்காட்டும் விதமாகவும் இருக்கின்றது.