லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யகோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த திட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கூறியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வகுமார், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ்குமார், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராஜன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன், உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து ஆர்பாட்டத்தில் விவசாயிகள் நாட்டு மாடுகளையும் அழைத்து வந்து கோரிக்கைகளை வலிய்ருத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.