சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிகில்’ திரைப்படம் ஜோர்டனில் முதல் முறையாக திரையிடும் தமிழ்ப் படம் என்ற சாதனை படைத்துள்ளது.கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து வெளிவந்த ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டான நிலையில், கால்பந்து வீராங்கனைகளாகத் தோன்றிய பெண்களின் நடிப்பு வெகுவாகப் பாராட்டைப் பெற்றது.
மேலும், ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய தந்தை விஜய்யின் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஒபனிங்கை கொடுத்துள்ள ‘பிகில்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியா தவிர பிற நாடுகளிலும் படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிவருகிறது. இதனிடையே அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டனில் படத்தை திரையிடவுள்ளனர். இதன்மூலம் அங்கு வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையை ‘பிகில்’ படம் படைக்கவுள்ளது.
நவம்பர் 15, 16 தேதிகள் காலை 11, மதியம் 3.30, இரவு 8 ஆகிய நேரங்களில் பிகில் படம் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாஸ் ஹீரோக்களின் படங்கள் தற்போது இந்தியா மட்டுமில்லாமல் கண்டங்கள் தாண்டி பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டுவருகின்றன. இதனால் படத்தின் பாக்ஸ்ஆபிஸ் வசூலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.