தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்க்ளுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில் மட்டுமே ஐந்து ஓட்டுகள் உள்ள நிலையில் வெறும் 1 ஓட்டு பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைடுத்தடுத்து, “ஒத்த ஓட்டு பாஜக” என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஒத்த ஓட்டு குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்து பேசுகையில், “அவர் பாஜக வேட்பாளர் அல்ல. தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை. அவர் சுயேச்சை வேட்பாளர் மட்டுமே என்று விளக்கமளித்துள்ளார். ஆனால் ஊடகங்கள் அவர் பாஜக வேட்பாளர் என்று பொய்யான தகவலை கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.