வாலிபரிடம் இருந்து ஒருவர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூல் செய்யும் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் பிஸ்னஸ் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் அந்த எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பிசினஸ் குறித்து விசாரித்துள்ளார். அதில் பேசிய மர்ம நபர் தான் அனுப்பும் லிங்கை பதிவு செய்து கொண்டால் யூசர் நேம் பாஸ்வேர்ட் அனுப்புவோம். அதனை பயன்படுத்தி 100 ரூபாய் செலுத்தினால் அது இருமடங்காக கிடைக்கும் என விக்னேஷிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய விக்னேஷ் முதலில் 100 ரூபாய் செலுத்திய பிறகு 200 ரூபாய் அவருக்கு திரும்ப கிடைத்துள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விக்னேஷ் 500, 1000 ரூபாய் என மொத்தம் 92 ஆயிரத்து 800 ரூபாய் வரை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து இரட்டிப்பான பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது விக்னேஷின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதனையடுத்து அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை விக்னேஷ் அறிந்துள்ளார். இதுகுறித்து விக்னேஷ் திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.