லண்டனில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த குங் ஃபூ வீரர் மரணத்திற்கு பிரிட்டிஷ் மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
லண்டனில் கிஷோர்குமார் பட்டேல்( 58) என்பவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து கொரோனா நோய் தொற்றை தவிர வேறு எந்த நோயும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருந்த இவர் 19 நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இவர் 55 வயதில் குங் ஃபூ சண்டையைக் கற்று கருப்பு பெல்ட் வாங்கி ஆரோக்கியமாக இருந்து திடீரென மரணம் அடைந்ததால் அவரது குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது.
இதற்கிடையில், கிஷோர்குமார் அனுமதிக்கபட்ட குறிப்பிட்ட மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 10 நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்ட வென்டிலேட்டர்களில் தவறான பில்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதை மருத்துவர் ஒருவர் கண்டறிந்தார். ஆனால் இதற்கு சிகிச்சை அளிப்பதற்குள் கிஷோர்குமாரின் சிறுநீரகங்கள் முதல் பல உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பும் ஏற்பட்டு இறந்துள்ளார். மேலும் இதே பிரச்சனையால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்றம் சார்பில் அதிகாரி ஒருவர் மரணங்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இவரது விசாரணையின் இறுதியில், கிஷோர்குமாரின் மரணம் வென்டிலேட்டர்களில் தவறான பில்டர்கள் நிறுவப்பட்டதால்தான் நிகழ்ந்துள்ளது எனவும் இதற்கு மருத்துவமனை ஊழியர்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் உபயோகத்தில் உள்ள இரண்டு வகையான பில்டர்கள் ஒரே நிறத்தில் காணப்பட்டதால், மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளின் வென்டிலேட்டர்களுக்கு தவறான பில்டரை பொருத்தியது தெரியவந்துள்ளது. இந்த இறப்புகள் தொடர்பாக மருத்துவமனை மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.