காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் மட்டுமே தெற்காசியாவில் அமைதி நிலவும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண பலமுறை சமரசம் செய்யப்பட்டாலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மேலும் பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில் அந்நாட்டுடன் நல்லுறவை பேண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பாகிஸ்தான் கைவிட்டபாடில்லை. இந்நிலையில் சிஐசிஏ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரோஷி காணொளி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் முதலில் காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கேட்டு அதன்படி ஜம்மு-காஷ்மீரின் மைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதை செய்யவில்லை எனில் தெற்காசியாவின் அமைதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தான் இருக்கும்” என்று கூறினார். இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் “இயற்கை பேரிடர் மற்றும் நோய்த் தொற்றுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது போல் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட வேண்டும். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலின் மற்றொரு உருவம்”என்று அவர் கூறினார்.