நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர்.
இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவுத் துறை கருத்துகள் என்று இந்திய ஊடகங்கள் வெளியிட்டுவரும் கருத்துகளுக்குப் பாகிஸ்தான் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்திய ஊடகங்களின் தகவல்களில் துளியும் உண்மை இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கியர்கள் மத்தியில் அதிருப்தியை விதைக்கும் நோக்கிலே இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு இதுபோல தவறான கருத்துகளைப் பரப்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய யாத்ரீகர்கள் கா்தார்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாமல் செல்லும் வகையில் பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்துவாராவிலிருந்து பாகிஸ்தானின் கா்தார்பூர் குருத்வாராவரை சாலை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் நவம்பர் 9ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.