வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் குவித்த அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் என்.ஆர். டி நகரில் முரளிதரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவரிடம் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் என்.ஆர்.டி நகரிலுள்ள முரளிதரன் வீட்டிற்கு சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது முரளிதரனின் வீடு பூட்டி இருந்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த முரளிதரனின் காரையும் சோதனை செய்துள்ளனர். ஆனால் சோதனையில் முரளிதரன் வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் என எதுவும் கிடைக்கவில்லை. இதே போல் முரளிதரனின் சொந்த ஊரான மதுரையில் உள்ள அவரது வீட்டிலும், சென்னையில் உள்ள அவரது நெருங்கிய நண்பரின் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்களை குவித்ததால் முரளிதரன் மீது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.