தந்தை-மகன் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நொச்சிகுளம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யாத்துரையின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அய்யாத்துரையின் மகனான கூலித் தொழிலாளியான கோதர் சரவணன் தனது வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கோதார் சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதில் கொலை செய்யப்பட்ட சரவணன் மற்றும் அவரது தந்தை அய்யாத்துரை ஆகியோருக்கும் நொச்சிகுளம் பகுதியில் வசிக்கும் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சரவணனின் தந்தையான அய்யாத்துரை கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்துள்ளார். இதனால் சரவணன் நொச்சிகுளம் பகுதிக்கு சென்று 2 பேரிடம் எனது தந்தையை நீங்கள் தான் கொன்று விட்டீர்கள் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரவணனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.
எனவே அவரது தந்தையான அய்யாதுரையும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். மேலும் தந்தை மகன் கொலை தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அய்யாத்துரையின் உடலில் எந்த காயமும் இல்லை. எனவே பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகுதான் அய்யாத்துரை கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.