தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான இன்று முதல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து பண்டிகை காலங்கள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் பொது இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகிய இடங்களில் அதிக அளவு கூடினால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.
அதன்படி விடுமுறை நாள்களில் மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகள், நீர்நிலைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி பூஜைகள் நடத்தப்பட வேண்டும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.