சென்னையில் சாதி மாற்றி திருமணம் செய்ததால் இளைஞர் துடி துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரத்தை அடுத்த கரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் முரளி. இவர் பணி முடித்து விட்டு வருகையில் தேனீர் கடை ஒன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயமடைந்த முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
பின் கண்ணகிபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் முரளி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதும், சில மாதங்களுக்கு முன்பாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்ததும் தெரியவந்தது. ஆகையால் இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.