டெல்லியை போன்று தமிழகத்தில் காற்று மாசு இல்லை எனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீர் நிலைகளில் ஏற்படும் பேராபத்து மற்றும் பேரிடர்களின் போது செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் ஒன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காற்று மாசு குறித்து தெரிவித்தார். அதில் டெல்லியை போல் தமிழகத்தில் காற்று மாசு இல்லை காற்று மாசு குறைவாக உள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது.
நேற்றைய தினம் காற்றின் தன்மை குறைவாக இருந்ததன் காரணமாக சற்று புகை மூட்டமாக சென்னை காணப்பட்டது என்று அவர் தெரிவித்த அவர், வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை மக்கள் நம்பி தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். டெல்லியைப் பொறுத்தவரையில் விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை எரித்ததனால்தான் காற்று மாசு அதிகமாக ஏற்பட்டது. அதை கருத்தில் கொண்டு தமிழகத்தை உற்று நோக்கும்பொழுது வேளாண்துறை சார்பில் விவசாய கழிவுகளை எரிக்கும் முயற்சி சிறப்பாக கட்டுப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.