அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் “தாலேட்ஸ்” என்ற ரசாயன பொருள்களை பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்விதழில் “தாலேட்ஸ்” ரசாயனம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசன் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் பொம்மை, ஆடை, நெகிழி, ஷாம்பு, உணவை பதப்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் “தாலேட்ஸ்” ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக ஆய்வை முன் நின்று நடத்திய லியோனார்டோ ட்ரசாண்டே தெரிவித்துள்ளார். ஆனால் தாலேட்ஸ் ரசாயனத்தை பயன்படுத்துவோருக்கு இதய நோய், உடல் பருமன், நீரழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இந்த பொருள்களின் நச்சுக்கள் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் இந்த நச்சுப் பொருள்கள் மனித உடலிலுள்ள நாளமில்லா அமைப்பிலும் பாதிப்பை (ஹார்மோன் இடையூறு) ஏற்படுத்துகிறது. இந்த ரசாயன பொருட்களால் அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே அமெரிக்கர்களுடைய பொருளாதார நிலைமையும், உடல்நலத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் நச்சு நிறைந்த தாலேட்ஸ் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று லியோனார்டோ ட்ரசாண்டே கூறியுள்ளார்.