உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரியான வயது மற்றும் பக்குவத்தை அடையாத குழந்தைகள் திருமண வாழ்விற்கு தள்ளப்படுவதே குழந்தை திருமணம் என்பதாகும். சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு 60 குழந்தைகள் வீதம் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் திருமணத்திற்கு பிறகான கருத்தரிப்பு மற்றும் உடல்நல பாதிப்பு போன்றவற்றால் சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டு ஒன்றுக்கு 22 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கட்டாயத் திருமணங்களில் தள்ளப் படுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 9 ஆயிரம் குழந்தைகள் இந்த குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெற்காசிய பகுதிகளில் எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு 6 குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க படுவதாகவும் இதனால் ஆண்டுக்கு 2,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் குழந்தை திருமணங்களால் ஏற்படும் இறப்பு விகிதங்களை எடுத்துக்கொண்டால் தெற்காசிய, கிழக்காசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் ஆண்டுக்கு 250 குழந்தைகள் பலியானதாகவும், லத்தீன், அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 560 குழந்தைகள் பலியானதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் கொரோனா பேரிடர் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் ஒரு கோடி குழந்தைகள் வரை கட்டாய திருமணம் எனும் படுகுழியில் தள்ளப்பட கூடிய அபாயமும் நிலவி வருவதாக எச்சரித்துள்ளது இந்த ஆய்வின் முடிவு.