தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 16ம் தேதி வரை குமரி கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.