தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் சகதியைப் பூசி அவமரியாதை செய்ததை கண்டிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாஜக சார்பில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளுவரின் பெயரை கலங்கப்படுத்த இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. பாஜக சார்பில் குஜராத் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்பிறகு தற்போது தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டிருக்கிறார். திருக்குறளை உலக நாடுகள் அனைத்தும் அறியவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பிடிக்காத சமூக விரோதிகள் பாஜகவின் பெயரை அவப்பெயர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு சகதியை பூசிவிட்டு இங்கு பல்வேறு போராட்டங்கள் நடத்துகின்றனர்.மேலும் திருவள்ளுவருக்கு எதிராக பாஜகவின் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சிக்கின்றனர். திருவள்ளுவரை உலக அளவில் எடுத்துச் செல்லக்கூடிய பாஜக அவரை அவமானப்படுத்துவதற்கு எந்த அவசியமும் கிடையாது.
தற்பொழுது பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் படத்தை எப்படி வெளியிட்டு இருக்கிறோமோ, அதை ஒட்டித்தான் 1800 காலக்கட்டங்களில் இருந்தது .அவர் எந்த மதத்தையும் சாராதவர் போல தோற்றத்தை உருவாக்குவதற்கு சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவராக இருந்தாலும் சரி, வள்ளுவர் சமுதாயமாக இருந்தாலும் சரி, அவர்கள் தீவிரமான இந்துக்கள் . திருக்குறளின் புகழை கெடுக்கக் கூடிய வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்றார்.