சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கூடல் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்காக கணேஷ்முண்டாவை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதற்குப்பின் விசாரணை முடிந்ததும் கணேஷ்முண்டாவை காவல்துறையினர் பேருந்தில் தேனிக்கு அழைத்து சென்று சிறைசாலைக்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது தேக்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சிறைச்சாலை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென கணேஷ்முண்டா தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரை விரட்டி பிடிக்க முயன்று உள்ளனர். ஆனால் குற்றவாளி அப்பகுதியில் இருந்த மலைபகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து மதுரை தல்லாக்குளம் காவல்துறையினர் கண்டமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தான் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.