தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சில வாரங்களாகவே பெய்து வரும் மழையினால் கடந்த 11-ஆம் தேதி மலைப் பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் தோன்றியது. இந்நிலையில் 2-வது கொண்டைஊசி எனும் வளைவினில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்த சீரமைப்பு பணி 3-வது நாளாக நீடித்தது.
இதற்காக 4 பொக்லைன் எந்திரங்கள், 10 லாரிகள் மற்றும் 700 மண் மூட்டைகள் உபயோகிக்கப்பட்டது. மேலும் 130 பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாலையிலும், இரவிலும் பெய்யும் மழையால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் ராஜேஷ்குமார், சாலை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் அவருடன் இருந்தனர். இவ்வாறு தொடர் மழையால் அந்த மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.