மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் எனவும், தற்போது உயர்ந்துள்ள டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படையினரால் கடலில் மூழ்கி சேதமான தமிழக மீனவர்களின் படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மீன் பிடிப்பதற்கான அனுமதி பெற்றும் மானிய விலையில் டீசல் வழங்காமல் உள்ள 19 படகுகளுக்கு உடனடியாக டீசல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே எங்களது கோரிக்கைகளை ஏற்று அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு மீனவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து மீனவ சங்கப் பிரதிநிதி சகாயம், தட்சணாமூர்த்தி, இருதயம் எடிசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.