தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வர இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிவரை இயங்கலாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காப்பாளர், சமையல் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான தடை தொடரும். மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.