இயக்குனர் போல் நடித்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இம்மானுவேல் ராஜா என்பவர் கடந்த நாட்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது அறைக்கு அடிக்கடி சில பெண்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு மற்றும் கடலோர காவல்துறையினர் இம்மானுவேலை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் இம்மானுவேல் தன்னை சினிமா டைரக்டர் என கூறி பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பெண்களிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஹோட்டல், விடுதிகளுக்கு வரவழைத்து வரவழைத்து மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல் இவர் பல ஊர்களுக்குச் சென்று பெண்களிடம் சினிமா ஆசை காட்டி உல்லாசமாக இருந்து பணம் பறித்தது தெரிய வந்துள்ளது இதனை தொடர்ந்து காவல்துறையினர் இம்மானுவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இதற்குப்பின் அவரிடம் இருந்த டம்மி துப்பாக்கி, ஏடிஎம் கார்டு மற்றும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மானுவல் ராஜா மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் ராமேஸ்வரத்திற்கு வந்த பிறகு ஒரு பெண்ணிடம் சினிமா ஆசையை காட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியது குறித்து ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் இம்மானுவேல் ராஜாவிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.