உலகளவில் ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தாலும் அந்நிறுவனத்தின் பழைய பெயரில்தான் செயல்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது தனி தயாரிப்புகளிலிருந்து சொந்த வர்த்தகத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு, இந்த புதிய லோகோவினை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் மற்ற துணை செயலிகளின் வியாபாரங்கள், சேவைகள் அனைத்தும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும். ஃபேஸ்புக் புதிய லோகோவின் நிறங்கள் துணை செயலிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிறத்திற்கு ஏற்ப மாறி காட்சியளிக்கும்.
இதுகுறித்து ஃபேஸ்புக் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்டோனியோ லூசியோ கூறுகையில்,” புதிய பிராண்டிங் தெளிவுக்காக புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் மற்றும் பயன்பாட்டிற்கு இடையில் ஒரு காட்சி வேறுபாட்டை உருவாக்கத்தான் தனிப்பயன் வடிவமைப்புகளை (Custom Typography) பயன்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமின், உள் நுழைவு பக்கத்தில் திரையின் அடிப்பகுதியில் “ஃபேஸ்புக்கிலிருந்து இன்ஸ்டாகிராம்” என எழுதப்பட்டிருக்கும். ஆனால், நிறுவனத்தின் புதிய வெர்ஷனில், இது “ஃபேஸ்புக்கிலிருந்து” என மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஃபேஸ்புக்’ பகுதியும் புதிய வடிவமைப்பிற்கு ஏற்ப பெரியதாகவும் மாற்றப்பட்டிருக்கும். ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் பயன்பாட்டு அமைப்பு பக்கத்திலும் புதிய லோகோ காணப்படும் எனத் தெரிகிறது. வருங்காலங்களில் அனைத்து சேவைகளிலும் புதிய லோகோ பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.