மனைவிக்காக அவருடைய கணவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுழலும் வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
போஸ்னியா எர்செகோவினா நாட்டிலுள்ள செர்பாக் நகர் அருகில் வோஜின் குசிக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மனைவியின் மீதான பாசத்தினால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு சுழலும் வீட்டை கட்டி கொடுத்துள்ளார். எனவே சூரியன் உதிப்பது முதல் மறையும் வரை வீட்டிற்குள் இருந்து கொண்டே இயற்கையைக் கண்டு ரசிக்க தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டைக் வோஜின் குசிக் பரிசளித்துள்ளார். இவ்வாறு கட்டப்பட்ட இந்த வீட்டில் சுழலும் வேகத்தை நம் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
இது மிக வேகமாக சுழன்றால் 22 வினாடிகளில் ஒரு முறை முழுமையாக சுற்றி முடிக்கும். ஆனால் மிக மெதுவாக சுழன்றால் ஒரு சுழற்சியை முடிக்க 24 மணி நேரம் ஆகும். இந்த அழகான வீட்டை வோஜின் குசிக் யாருடைய உதவியும் இன்றி தனிநபராக 6 வருடங்களில் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகோலா டெஸ்லா மற்றும் மிஹாஜ்லோ புபின் போன்றோரின் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு இந்த புதிய முயற்சியில் வீடு கட்டியதாக வோஜின் குசிக் தெரிவித்துள்ளார். இதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்ல வருகின்றனர்.