வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் நகரில் வீரக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பின் வீரக்குமார் மனைவியிடம் தொழில் செய்வதற்கு மூன்று லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் மன உளைச்சலில் இருந்த இந்துமதி தாயிடம் தொலைபேசியில் நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் கூறி விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி இந்துமதியின் தாயார் ஜெயபாரதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரக்குமாரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கானது இம்மாவட்டத்தின் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அனைத்து விசாரணைகள் முடிவடைந்த காரணத்தினால் நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் வீரக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.